அந்தமான் அருகே மத்திய வங்கக் கடல் பகுதியில் 16-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.15-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த பகுதியானது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி, கடலில் 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
16ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து அவை மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டு புயலாக மாறும். இந்த புயலுக்கு ஆம்பன் புயல் என்று பெயர் வைத்துள்ளனர். இதனால் 16-ஆம் தேதி 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகம் வரை வீசும் காற்று, மேலும் வலுப்பெற்று 17ஆம் தேதி 65 கி.மீ. முதல் 75 கி.மீ வரை காற்று வீசும். இதனால் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வரும் 15,16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என அறிவித்த வானிலை மைய அதிகாரி தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
மேலும் வாசிக்க: கொரோனாவை குணப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா.. ஆய்வுசெய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி மூலம் தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேசமயம் கரூர், வேலூர், திருத்தணி, திருச்சி ஆகிய பகுதிகளில் வெயில் அதிகமாகவே உள்ளது.