டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பு குறித்து பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். அன்று மாலையில், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இருட்ட தொடங்கியதால் அவசரமாக ஆய்வை முடித்துக்கொண்டனர்.
 
இதையடுத்து அன்று இரவு தஞ்சாவூரில் தங்கினர். நேற்று காலை, கலெக்டர் அண்ணாதுரை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் புறப்பட்டனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூர் பகுதியில் ஆறுமுகம் என்பவரது வீடு சேதம் அடைந்திருப்பதை பார்வையிட்டனர்.
 
அப்போது ஆறுமுகத்தின் மகள் பிரபா, “எனது தந்தை வசித்த வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. புதிதாக ஓடு மாற்றுவதற்கு ஒரு ஓட்டுக்கு ரூ.50 செலவாகிறது. பழைய ஓடு ஒன்றுக்கு ரூ.30 செலவாகிறது. புயலால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக இருக்கும் நாங்கள் எப்படி புதிதாக ஓடுகள் வாங்கி மாற்ற முடியும். மின்சாரம் இல்லாததால் தண்ணீர் வரவில்லை.
 
இதனால் நாங்கள் குளித்து 10 நாட்களாகி விட்டது. ஏதாவது நோய் ஏற்பட்டு விடுமோ என்று அச்சமாக உள்ளது. சமையல் செய்வதற்கு அரிசி இருக்கு, ஆனா மண்ணெண்ணெய் இல்லை. காஸ் இல்லை. எனவே இதை முதலில் வழங்க வேண்டும்’’ என்று மத்திய குழுவினரிடம் கண்ணீருடன் கூறினார்.
 
அதே பகுதியில் இந்திராகாந்தி என்பவர் வீடு, தென்னை மரம், மாட்டு கொட்டகை சேதத்தை பார்வையிட்டனர். இந்த பகுதிகளை 10 நிமிடம் மட்டுமே பார்வையிட்டனர்.
 
அங்கு புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு பெண், திடீரென மத்திய குழுவினரின் காலில் விழுந்து நிவாரணம் தரும்படி கதறினார்.
 
இதன்பின்னர், பட்டுக்கோட்டை அருகே நெம்மேலிதிப்பியகுடி, புதுக்கோட்டை உள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று தென்னந்தோப்புகளை பார்வையிட்டனர்.
 
அப்போது விவசாயிகள் தெரிவித்த சேத விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் மல்லிப்பட்டினத்தில் புயலால் சேதமடைந்த படகுகள், மீன்பிடி தளத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த மீனவர்களும் பாதிப்பு குறித்து விவரித்தனர்.
 
இதையடுத்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு மத்திய குழுவினர் சென்றனர். அங்கு சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பின் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு ஜாம்புவானோடை பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
 
அதன்பின்னர் பேரிடர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டனர். அப்போது, மத்திய குழுவை முற்றுகையிட்ட அவர்கள் “நாங்கள் வீடு, உடமைகள், கால்நடைகளை இழந்து நிர்க்கதியாய் தெருவுக்கு வந்துவிட்டோம். அதற்குரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்’’ என்று கூறி கதறி அழுதனர்.
 
அங்கிருந்து புறப்பட்டு இடும்பாவனம் வழியாக நாச்சிக்குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை பார்வையிட்டனர். அங்கு, “புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
 
இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வாழை ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும்’’ என்று விவசாயிகள், பெண்கள் கேட்டுக் கொண்டனர்.
 
பல இடங்களில் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, அதிமுக அரசும் மத்திய குழுவினர் கிராமப்பகுதிக்கு உள்ளே வந்து பார்வையிடாதது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் மத்திய குழுவினர் செய்வதறியாது திணறினர்.
 
பின்னர் நாச்சிக்குளத்தில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டி வழியாக மாலை 5.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்றனர். திருவாரூர் மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருத்துறைப்பூண்டியும் ஒன்றாகும், ஆனால் எங்குமே இறங்காமல் மத்திய குழுவினர் புயல் வேகத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு சென்றனர். ஒவ்வொரு பகுதியிலும் 10 முதல் 15 நிமிடங்கள் வரையே பார்வையிட்டனர்.
 
திருவாரூர் மாவட்டம் தொண்டியக்காடு பகுதியில், மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறுகையில், `டெல்டா மாவட்டஙகளில் தென்னைமரங்கள், குடிசைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்த புயலின் தாக்கத்தை மக்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதமதிப்பீடு அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதற்கு முன்னர் சென்னையில் முதல்வரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர் டெல்லியில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’ கூறினார்.
 
தஞ்சாவூர், திருவாரூரில் ஆய்வை முடித்துக் கொண்டு, நாகையில் இரவு தங்கினர். இன்று, நாகை வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிடுகின்றனர்.
 
ஆய்வின்போது, ஒரத்தநாடு புதூரை சேர்ந்த ராதா கூறும்போது, `புயல் நிவாரணம் வழங்குவதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை கேட்கிறார்கள். நாங்களே ஆதாரமில்லாமல் இருக்கிறோம். சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை மட்டும் பார்வையிட்டு விட்டு மத்தியக்குழு செல்கிறது. இந்த புகைப்படங்களை பார்வையிடுவதற்காகவா டெல்லியில் இருந்து மத்தியக்குழு வர வேண்டும்?’ என்றார்.