அதிமுக கூட்டணியில் இணைவதை ஜவ்வு மாதிரி இழுத்தப்படியே இருந்த தேமுதிக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கூட்டணியை இறுதி செய்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.  கூட்டணியில் 4 இடங்கள் என அதிமுகவும் தேமுதிகவும்  ஒப்பந்தம் செய்து கொண்டன.   
 
இதற்காக 10-ந் தேதி இரவு, இரு கட்சிகளின் தலைவர்களும் ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் சந்தித்தனர்.  அப்போது, அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், கே.பி.முனுசாமி, தேமுதிக தரப்பில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் 40 நிமிடங்கள் தனியாக ஆலோசித்தனர்.    
 
அதில், “4 இடங்கள் என்பதை 6 இடங்களாக உயர்த்தி தரலாம்” எனக் கேட்டுப்பார்த்தார் பிரேமலதா. எடப்பாடியின் கைகளைப் பற்றிக்கொண்ட விஜயகாந்த், “பிரேமா, சொல்வதை யோசிக்கலாமே?” என வார்த்தைகளை மென்று விழுங்கியபடி பேசியிருக்கிறார்.
 
அதிமுக தலைவர்களுக்கு இது சங்கடமாகத்தான் இருந்தது.  தேமுதிக வினரோ வெறும் 4 தொகுதி கொடுத்து விட்டு ஆட்டம் போடும் அதிமுக விடம் தனது தலைமை பணிந்து விட்டதே என வருத்ததுடன் பேசி வருகின்றனர்  
 
ஆனாலும் இதனை எல்லோரும் ஒப்புக்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேசமயம், அந்த 4 இடங்களில் 2 பொது தொகுதிகளையும், 2 தனித் தொகுதிகளையும் (ரிசர்வ்) ஒதுக்கீடு செய்ய அதிமுக தலைவர்கள் முடிவு செய்து வைத்துள்ளனர்.
 
அதற்கு பிரேமலதா, “பொதுத்தொகுதிகளில் மூன்றும், தனித்தொகுதி ஒன்றும் ஒதுக்குங்கள்” என கேட்டுக்கொள்ள, “கூட்டனியிலுள்ள கட்சிகளுக்கு பொது தொகுதிகளை பகிர்ந்தளித்திருப்பதால் அதன் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இருப்பினும் மற்றவர்களிடம் பேசுகிறோம்.
 
அவர்கள் ஒப்புக்கொண்டால் பொதுத் தொகுதியை கூடுதலாக்கித் தருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதே சமயம் அதற்கு வாய்ப்பில்லையெனில், எங்கள் மீது வருத்தப்படக்கூடாது” என சொன்னார் ஓபிஎஸ்!    
 
மேலும், அதிமுக கூட்டணியில் நீங்கள் இணையும் சூழலில், பத்திரிகையாளர்களிடம் அதிமுகவை விமர்சித்திருக்கக் கூடாது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என ஓபிஎஸ் சொல்ல, அதற்கு அதிமுக தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பிரேமலதா