அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்த பணிகளை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாகக் கூறி, முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கிடையில், எஸ்.பி.வேலுமணி மீது வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி அதிமுக எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் விசாரணை நடைபெற்றன. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ், எஸ்.பி.வேலுமணி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தவே, வக்கீல் ஜெ.கருப்பையாஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில், தனக்கெதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. அறிக்கை அளித்து, ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்ததாகவும், தமிழக அரசும் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் நடவடிக்கையை கைவிடுவது என முடிவு எடுத்ததாக வாதிட்டப்பட்டது.
ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், அதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், அந்த குழுவிலும் இடம்பெறவில்லை என்றும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில் கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் தன் மீது வழக்குப்பதிவு செய்து இந்நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தியுள்ளதாகவும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில், பொதுவாக அல்லாமல் குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்கள் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குபதிவு செய்துள்ளதாக அமைச்சர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு எனவும், முந்தைய அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
மற்றொரு புகார்தாரரான திமுக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே, உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுவதாக குறிப்பிட்டார். புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டது.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்குகளில் இன்று (30.11.2022) பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி, இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே சமயம், எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.