தமிழ்நாடு சிறைகளில் உள்ள 700 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “சிறை கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி வருகிற 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
கைதிகளின் தண்டனையை நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் வைத்து முன்னதாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையடுத்து சென்னை புழல் சிறைச்சாலை உள்படத் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் 700 பேரை விடுதலை செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் பாலியல் பலாத்காரம், பயங்கரவாதம், மத மோதல், ஜாதி மோதல், அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்யவும் இறுதி பட்டியலைத் தயார் செய்யவும் இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.