நேரு காலத்த்தை போலவே கொள்முதல் விஷயத்தில் இந்தியா தன்னிச்சையான கொள்கையை பின்பற்றுகிறது என ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியுள்ளார்.
ரஷ்யாவுடன் வர்த்தத உறவு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீது, ‘அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் தடை சட்டம்’ (காட்சா) என்ற சட்டத்தின் மூலம் அமெரிக்கா பொருளாதார தடை நடவடிக்கை எடுத்து வருகிறது. உக்ரைன் வசமிருந்த கிரீமியாவை ராணுவ நடவடிக்கை மூலமாக ரஷ்யா இணைத்து கொண்டதால், அந்நாடு மீது இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது இந்த தடை பாயும் என அது எச்சரிக்கை விடுத்திருந்தது. அதைப் பற்றி கவலைப்படாமல் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க, இந்தியா இருதினங்களுக்கு முன் ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், ரஷ்யாவில் 6 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத், டெல்லியில் ேநற்று நடந்த ஜெனரல் கே.வி.கிருஷ்ணா ராவ் நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில், அவர் பேசியதாவது”இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதில் ரஷ்யர்கள் ஆர்வமாக உள்ளனர்.
நமது ராணுவம் வலுவானது என்பதையும், நமது யுக்திகளின் அடிப்படையில் நமக்கு எது சரியோ அதை செய்யும் திறன் படைத்தவர்கள் என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ரஷ்ய பயணத்தில், ரஷ்ய கடற்படை அதிகாரி என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘இந்தியா தற்போது அமெரிக்காவை சார்ந்துள்ளது போல் தெரிகிறது. ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால், இந்தியா மீது தடை விதிக்கப்படும் என அது எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி உங்கு கருத்து என்ன?’ என கேட்டார்.
இதற்கு நான், ‘‘ஆமாம், எங்கள் மீது அமெரிக்கா தடை விதிக்கலாம். அதை எதிர்கொள்ள தயார். சில தொழில்நுட்பங்களுக்காக நாங்கள் அமெரிக்காவுடன் நட்புடன் இருக்கலாம். ஆனால், நாங்கள் தன்னிச்சையான கொள்கையை பின்பற்றுகிறோம். இதற்காக எதிர்காலத்தில் நாங்கள் அமெரிக்காவின் சவால்களை எதிர்கொள்ளலாம். நாங்கள் ரஷ்யாவடன் இணைந்து செயல்படுவதற்கு முடிவே இல்லை. எங்கள் நாட்டுக்கு எது சிறந்ததோ அதை செய்வது சரியானது என நினைக்கிறேன்’’ என கூறினேன்.
எஸ்-400 ஏவுகணை மட்டும் அல்ல, ரஷ்யாவிடம் இருந்து ‘காமோவ்’ ஹெலிகாப்டர்கள் மற்றும் இதர ஆயுதங்களையும், தொழில்நுட்பங்களையும் இந்தியா வாங்கவுள்ளது. விண்வெளி தொழில் நுட்பத்திலும் ரஷ்யாவின் உதவியை இந்தியா எதிர்நோக்கியுள்ளது.
இவ்வாறு பிபின் ராவத் பேசினார்.