இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63. தற்போது பூந்தமல்லி பகுதியில் நசரத்பேட்டையிலுள்ள ஈவிபி பிலிம் சிட்டி பகுதியில் தளபதி 63 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது ஃபோகஸ் லைட் கீழே விழுந்து மின் பணியாளர் எலக்ட்ரீசியன் செல்வராஜ் என்பவர் காயமடைந்த நிலையில், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரை, விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஈவிபி பிலிம் சிட்டியில், ஆய்வு மேற்கொண்டனர். அதில், பிலிம் சிட்டி, உள்ளரங்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட படப்பிடிப்பு ஆகியவற்றிற்கு அனுமதி அளித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும், அனுமதி வழங்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை சரிவர பின்பற்றாத காரணத்தால் பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தளபதி 63 படப்பிடிப்பின் போது தீயணைப்பு வாகனம், தீத்தடுப்பு உபகரணங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவம் முதலுதவி குழு ஆகியவை செயல்படவில்லை என்று போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். கிரேன் மற்றும் கால்பந்து மைதானம் அமைப்பதற்கு உரிய அனுமதி சம்பந்தபட்ட துறை மற்றும் காவல்துறையிடம் பெறவில்லை.
இது போன்ற காரணங்களால், ஈவிபி பிலிம் சிட்டியின் நிர்வாக செயல்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி விளக்கம் கொடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு துவங்கியபோது, படக்கதை தன்னுடையது என்று குறும்பட இயக்குனர் செல்வா புகார் தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். கதை திருட்டு பிரச்சனை குறித்து அட்லி வாய் திறக்கவில்லை. அவர் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் அட்லி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்பியதாக துணை நடிகை கிருஷ்ண தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அட்லியின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அது பொய் புகார் என்று தெரிவித்துள்ளார் அட்லி.
தளபதி 63 படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து அடுத்தடுத்து பிரச்சனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.