தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் அவர் திருநங்கை வேடத்தில் இருக்கும் ஒரு புகைப்படமும் வெளியானது. இதையடுத்து, திருநங்கையான ஷில்பா கதாபாத்திரத்தின் புதிய புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஜினி, கமல், சத்யராஜ் தொடங்கி பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பலரும் பெண் வேடம் அணிந்து நடித்துள்ளனர். தற்போது இந்த வரிசையில் விஜய் சேதுபதியும் சேர்ந்துள்ளார். மேலும் படத்தில் பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் திரைக்கதையை தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் கே.சேகர் ஆகியோர் எழுதி உள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். டப்பிங் பணிகளை தொடர்ந்து தற்போது கலர் டோன் ஒர்க் பணிகள் என இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.