பல்லடம் அருகே விளை நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த தம்பதியை போலீசார் இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக அடித்தி தள்ளி ஜீப்பில் ஏற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை கூட்டி உள்ளது
 
திருப்பூர் மாவட்டம் புகலூரில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கிலோவாட் உயர் அழுத்த மின்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
இதற்காக மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் உயர்மின் வழித்தடங்கள் மற்றும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
 
ஆனால் விளைநிலங்களுக்கு மத்தியில் உயர்மின் அழுத்த பாதை கொண்டு செல்வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 8 மையங்களில் கடந்த 2 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
நேற்றுமுன்தினம் திருப்பூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பாளையத்தில் சூலூர் வட்டாட்சியர் ஜெகதீஸ் தலைமையிலான வருவாய்த்துறையினரும், போலீசாரும் எதிர்ப்பை மீறி விளைநிலங்களை அளவிட்டனர்.
 
இதுபற்றி தகவலறிந்து வந்த நில உரிமையாளர்கள், வருவாய் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
சின்னமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி அருண்குமார், அவரது மனைவி நிலத்தை அளவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை போலீசார் குண்டுகட்டாக அடித்து தூக்கிச்சென்று ஜீப்பில் ஏற்றினர்.
 
இதனை விவசாயிகள் தடுத்து வாக்குவாதம் செய்ததால் தம்பதிகள் விடுவித்தனர். பல்லடத்தை அடுத்த கிருஷ்ணாபுரம், சின்னப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்களில் அளவிட முயன்றனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
சேலம் மாவட்டம் வாழப்பாடியிலுள்ள சேஷன்சாவடி மையத்தில் 3-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இதில் ஆண்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அனைவரும் தலையில் முக்காடு போட்டு இருந்தனர்.
 
பெண்கள் ஒப்பாரி வைத்து மார்பில் அடித்து கதறி அழுதபடி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து விவசாயிகள் கூட்டியக்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி உழைத்த நிலத்தை சீரழிப்பதை பொறுக்க முடியாமல் ஒப்பாரி வைத்து அழுதோம். அரசு எங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து இத்திட்டத்தை மாற்றும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்’ என்றனர்.
 
ஈரோடு அருகே பெருந்துறை ரோடு மூலக்கரை என்ற இடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பாடை கட்டி டவர்-லைன் படத்தை வைத்து தாரை, தப்பட்டைகள் முழங்க ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பின்னர், போராட்டம் நடந்த இடத்தில் இருந்து டவர்லைன் கொண்ட பாடையை சுமந்தபடி எரிப்பதற்காக கொண்டு சென்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பாடையை எரிக்காமல் போராட்ட பந்தலுக்கு முன்பு வைத்திருந்தனர்.