விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வரும் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சீதக்காதி. ரம்யா நம்பீசன், காயத்ரி, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பெயரை மாற்றி வைக்க இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரகீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீதக்காதி என்ற பெயரில் பொழுதுபோக்கு திரைப்படம் எடுத்து இருப்பதாக தகவல் வருகிறது. சீதக்காதி தமிழர்களின் ஒரு அடையாளமாக வாழ்ந்தவர். இசுலாமியராக இருந்தாலும் அனைத்து மக்களுக்காகவும், மனித நேயத்திற்காகவும் வாழ்ந்த மாமனிதர் சீதக்காதி.

இராமநாதபுரம் கீழக்கரையில் பிறந்த ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதி 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர். பன்முகங்கள் கொண்ட சீதக்காதி பெரிய வணிகர். உமறுப் புலவரின் சீறாப்புராணம் பாடுவதற்க்கும் தமிழ் இலக்கியங்கள் வெளியிடுவதற்கும் நிதியுதவி செய்துள்ளார். கொடை வள்ளல் என்ற அடைமொழி கொண்டவர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதக்காதியின் கண்ணியத்தை சீரழிக்கும் எந்தவித நடவடிக்கையையும் இந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது. ஆகையால் ஷெய்கு அப்துல் காதர் என்கிற சீதக்காதியின் சிறப்பை போற்றும் விதமாக இல்லாமல் பொழுதுபோக்கு படம் எடுத்து அதற்கு சீதக்காதி என பெயர் சூட்டுவதை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

விஜய்சேதுபதி நல்ல நடிகர். சீதக்காதி என்ற படத்தின் பெயரை மாற்ற வேண்டும், இல்லை என்றால் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழில் விஜய்சேதுபதி நடிப்பில் 25வது படமாக தயாராகியுள்ள சீதக்காதி படத்தின் விளம்பர பணிக்காக சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் சீதக்காதி படத்தில் விஜய்சேதுபதி ஏற்றுள்ள அய்யா கதாபாத்திரத்தின் மெழுகுச்சிலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.