வடசென்னை அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக ஓய்வு பெற்ற மத்திய சுற்றுச்சூழல் நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், செப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் வடசென்னை அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல் கழிவுகள் சேமிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாம்பலால் செப்பாக்கம் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல குடும்பங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், உடல்நிலை பாதிக்கப்பட்டும், பிழைப்பு தேடி கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது வெறும் 25 குடும்பங்கள் மட்டுமே வேறு வழியின்றி அங்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடசென்னை அனல் மின்நிலைய கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள செப்பாக்கம் கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளுவதற்காக ஓய்வுபெற்ற தேசிய சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள செயலாளர் சசிசேகர் நேற்று வந்தார் ஆய்வுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய விவரம் ” வடசென்னை அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகளால் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு போன்ற நீர்நிலைகள் பெருமளவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெருகிவரும் தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் வடசென்னை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, விரிவாக ஆய்வு செய்து அதை அறிக்கையாக மத்திய, மாநில அரசுகளிடம் வழங்கி எஞ்சியுள்ள பகுதிகளையாவது காப்பற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க கோரிக்கைவிடப்படும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றல் உச்ச நீதிமன்றம் வரை செல்லவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.