பழைய தாலுக்கா அலுவலம் புனரமைக்கப்பட்டு, ‘டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதாவிற்கு ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரம் மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்குப் பிறகு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெறும் எனக் கூறப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்திற்கு என புதிதாக கட்டடங்கள் ஏதும் இல்லாத நிலையில் விழுப்புரம் திருவிக சாலையில் அமைந்துள்ள பழைய தாலுக்கா அலுவலம் புனரமைக்கப்பட்டு, ‘டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. பெயரளவிற்கு மட்டுமே உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் முழுமையான மாணவர் சேர்க்கையும் இதுவரை நடைபெறவில்லை.

எனவே கடந்த மே மாதம் புதிதாகப் பதவியேற்ற திமுக அரசு, ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு என கட்டமைப்புகள் ஏதும் இல்லாத நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கம் சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 31) தாக்கல் செய்தார்.

அந்த சட்டமசோதாவின்படி, அதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒற்றைப் பல்கலைக்கழக வகையிலிருந்து (Unitary) இணைப்புப் பல்கலைக்கழகமாக (Affiliated) மாற்றப்பட்டது.

2021 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை நீக்குவதாகவும் அரசு முடிவு செய்துள்ளது என அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரம், நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் எழுந்தது. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக வலியுறுத்தியது.

[su_image_carousel source=”media: 26038,26040″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதில் எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை, தற்போதைக்கு ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையில்லை என்பதால், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இம்மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறோம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்மசோதாவை ஆய்வுக்கு எடுக்கும்போது விரிவாகப் பேசலாம், வாய்ப்பு தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆனால், இம்மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததையடுத்து, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர், ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கலைவாணர் அரங்கத்துக்கு முன்பாக இருந்த சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரைக் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள், சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்ட பிறகு பிற்பகல் 2.15 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, இதே கோரிக்கையை முன்வைத்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்- தமிழ்நாடு அரசு