ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரிய வழக்கில், அவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிபிஐ தரப்பு, 7 பேர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியது.

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என கூறியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி மாநில அரசு தமக்குள்ள 161வது பிரிவு அதிகாரத்தின் கீழ் 7 பேரை விடுதலை செய்ய முடியும். இருப்பினும் 7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு, ஜனவரி 20 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நசீர் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் பேரறிவாளனை விடுதலை செய்வது பற்றி குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கானது ஜனவரி 21 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்குப் பதிலாக ஆளுநரே 3 அல்லது 4 நாள்களுக்குள் ஆளுநர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், விடுதலை தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்தக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யபட்டது. இதனையடுத்து, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி நாகேஸ்வரராவ் உத்தரவிட்டுள்ளார்.

பேரறிவாளன் விடுதலையில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டுமாம்.. சொல்கிறது மத்திய அரசு