இலங்கை பிரதமராக ராஜபக்சே தொடர அந்நாட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 
பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே மீது இலங்கை அதிபர் சிறிசேனா அதிருப்தி அடைந்ததால் திடீர் நடவடிக்கையாக ராஜபக்சேவை பிரதமராக நியமித்து உத்தரவிட்டார். இருப்பினும் ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்க வில்லை.
 
இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜபக்சே தோல்வி அடைந்தார்.
 
இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
 
ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டார்.
 
இதற்ககிடையில் அந்நாட்டு ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க்கள் 122 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இலங்கை நீதிமன்றம் ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்தது.
 
மேலும் ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிச.,12ம் தேதி ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டதை அதிபர் சிறிசேனா விரைவில் திரும்பப் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.