ஊரடங்கு உத்தரவு 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 25 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களுக்கு எந்தவித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள், சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின்படி, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர (Except Containment Zones) பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.

மேலும் வாசிக்க: ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல சைக்கிளை திருடிய உ.பி தொழிலாளி செய்த நெகிழ்ச்சி காரியம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.