தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது, தற்போதைய நிலையே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி நள்ளிரவு தொடங்கி மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது காய்கறி, பால், மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி, அதேபோல் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டன.

இதனால் நாட்டின் வருவாய் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து அறிவிக்கை வெளியிட்டது. இதன்படி எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகளை ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு செயல்பட அனுமதிக்கலாம் என்று மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இதற்காக தமிழக அரசு சார்பில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை அடிப்படையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 3ம் தேதி வரை தற்போதைய நிலையே தொடரும் என்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும், ஏற்கெனவே அரசால் அளிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று குறைந்தால் வல்லுநர் குழுவின் ஆலோசனை பெற்று நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.