ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக அறிமுகமான ‘எல்.கே.ஜி (LKG)’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை எட்டி வருகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் கே.ஆர்.பிரபு இயக்கிய ‘எல்.கே.ஜி’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று (பிப்ரவரி.22) வெளியானது. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அரசியல் காமெடி திரைப்படமான எல்.கே.ஜி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் “எல்.கே.ஜி படத்தை ஏற்றுக் கொண்டதையும், அதன் எண்களையும் நம்ப முடியவில்லை. உண்மையான அன்பிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி. என்றும் நன்றியுடன் இருப்பேன். தொடங்கிய இடத்திற்கே மீண்டும்.. அற்புதமான வாழ்க்கை” என ட்வீட் செய்து, குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டாரின் மரண மாஸ் பாடல் பாடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மூன்றே நாட்களில் பட்ஜெட் தொகையை எடுத்துவிட்டதாகவும், இப்படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்ட சக்திவேலன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எல்.கே.ஜி திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1.36 கோடியும், தமிழகம் முழுவதும் சுமார் 8.5 கோடியும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஒரு படம் வெற்றி அடைய ஸ்டார் வேல்யூ அல்லது பெரிய பட்ஜெட் தேவையில்லை என்பதும் கதை, உருவாகும் விதம் நன்றாக இருந்தால் சிறு பட்ஜெட் படமும் நல்ல லாபத்தை கொடுக்கும் என்பதும் மீண்டும் உறுதியாகியுள்ளது.