மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஆட்சியமைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசியல் விவகாரங்களில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2019 நவம்பர் முதல் 2022 ஜூன் வரை ஆட்சி நடத்தியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

இதனைத்தொடர்ந்து ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஷிண்டே அணி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் 16 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதனையடுத்து மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்காததால், உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. பின்னர், பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் கடந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு அடுத்த நாளான ஜூன் 30 ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே அணியும் பாஜகவும் இணைந்து மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைத்தன. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவில் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

ஆட்சி மாற்றம் தொடர்பாக உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், “மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை ஏக்நாத் ஷிண்டே கவிழ்த்தது சட்டத்துக்கு புறம்பானது தான். அதேசமயம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே உத்தவ் தாக்கரே தாமாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்தசூழலில் ராஜினாமாவை ரத்து செய்து அவரை மீண்டும் முதல்வராக நியமிக்க முடியாது.

அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது தவறான முடிவு. இந்த முடிவு எடுத்ததற்கான வலுவான காரணத்தை அவர் கூறவில்லை. இந்த விஷயத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி பல தவறுகளை செய்துள்ளார்.

நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை இழந்ததாக ஆளுநர் கோஷ்யாரி கூறியது மிகப்பெரிய தவறு. கட்சிக்கு உள்ளே அல்லது வெளியே நடக்கும் பிரச்சினைகளுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தீர்வு காணக் கூடாது.

அதேபோல, மாநில அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கும், முடிவெடுப்பதற்கும் ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் கொடுக்கவில்லை. எனினும் உத்தவ் பதவி விலகிய பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் கிடையாது.

தற்போதைய சபாநாயகர் ராகுல் நாவேகர், சிவசேனாவின் கொறடாவாக ஷிண்டே அணியை சேர்ந்த பகத் கோகவலேவை அங்கீகரித்தது தவறான முடிவு. மேலும் ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் நபம் ரெபியா தீர்ப்பை மறு ஆய்வு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து 7 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. இதன் அடிப்படையில் 16 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் முடிவு எடுக்கலாம்” என்று தீர்ப்பளித்து உள்ளது.