மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 5,738 நபர்களிடம் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.5,93,78,500 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லையில் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மீது புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, ஒன்றிய அரசு அபராதமாக ரூ.10,000 விதித்துள்ளது. அதன்படி, மது அருந்திவிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அபராமாக ரூ.10,000 வசூலித்து வருகின்றனர்.

அபராத தொகையை சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றம், ஆன்லைன், அஞ்சல் நிலையங்களில் கட்டலாம் என்ற நிலை உள்ளதால், வழக்குப் பதிவு செய்யப்படும் நபர்கள் அபராத தொகையை தாங்கள் கட்டிவிடுவதாக கூறி சென்று விடுகின்றனர்.

ஆனால் சொன்னப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர்கள் அபராத தொகையை கட்டுவது கிடையாது. அந்த வகையில் மாநகர காவல்துறையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் தற்பாது 7,417 நபர்கள் உள்ளனர்.

இதனால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கும் வகையில் காவல்துறை சார்பில் 10 அழைப்பு மையங்கள் தொடங்கி அதன் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டி அபராத தொகையை மாநகர காவல்துறை தற்போது வசூலித்து வருகிறது.

அந்தவகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த சிறப்பு மையங்கள் மூலமாக நிலுவையில் இருந்த 5,738 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.5,93,78,500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை செலுத்தாவிட்டால், அவர்களது வாகனம் அல்லது அசையும் சொத்துக்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கோர்ட்டு மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.