காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம். சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024 மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

இதில், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பஞ்சாப் பஞ்சாபில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்துள்ளது.

இதேபோல், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி மாயமாகி போயுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், “கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட மூன்று மாதங்களில் 6% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது போதும்.

உத்தரப் பிரதேச தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருட்டு மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சோர்ந்துவிடாமல், அந்த இயந்திரங்களை தடயவியல் சோதனை நடத்தும்படி வலியுறுத்த வேண்டும். அகிலேஷ் யாதவின் வாக்கு சதவீதம் இந்த முறை 20 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி நம்பகத்தன்மையை இழந்துவருகிறது. காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம். இப்போதைக்கு ஆக்ரோஷமாக இருக்க வேண்டாம், நேர்மறையாக இருங்கள். இந்த வெற்றி பாஜகவுக்கு பெரும் இழப்பாக அமையும். இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024 மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.