தமிழகம் முழுவதும் தற்போது குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. மழை இல்லாததாலும், மழைநீரை முறையாக சேமித்து வைக்காததாலும், நீர்நிலைகள் மாயமாகி வருவதாலும் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது பலரது குற்றச்சாட்டாகும்.
 
இந்நிலையில் தண்ணீர் தரும் ஆற்றில் குப்பை, மருத்துவ கழிவுகள் கொட்டும் அவலம் நடந்து வருகிறது.
 
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியில் குவியும் குப்பைகள் டிராக்டர், லாரி மூலம் துப்புரவு பணியாளர்கள் எடுத்துச்சென்று திருவலம் காவல் நிலையம் பின்புறம் உள்ள கெம்பராஜபுரம் திரவுபதியம்மன் கோயில் அருகே மற்றும் பொன்னை கூட்ரோடு போன்ற பகுதிகளில் பொன்னையாற்றில் கொட்டி வருகின்றனர்.
 
திருவலம் காவல் நிலையம் பின்புறம் உள்ள பொன்னையாற்றில் கொட்டப்படும் குப்பை கிடங்கில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் தனியார் மருத்துவமனை கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.
 
இதில் அடிக்கடி யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் புகை சூழ்ந்து அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்துவிடுகிறது.
மேலும் காற்றுவீசும்போது குப்பைகள் பறந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் குவிகிறது. இதுகுறித்து, பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை அதிமுக அரசின் அதிகாரிகள் எடுக்கவில்லையாம்.
 
மேலும், பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பல லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கு இருந்தும் குப்பைகளை பொன்னையாற்று பகுதியில் கொட்டப்படுகிறது.
 
அவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகளால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்னை, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குடிநீர் வழங்கும் ஆற்றில் குப்பைகள், மருத்துவகழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.