பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்த உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்து உள்ளார்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று யுஜிசி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வு இந்த மாதம் இறுதியில் நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, “இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவர்கள் படிப்பினை நிறைவு செய்ய ஏதுவாக இந்த மாதம் இறுதியில் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட உள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறைவான கல்லூரி வேலை நாட்களின் காரணமாக பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க இயலவில்லை. ஆகையால் ஒவ்வொரு பாடத்திலும் 5 பகுதிகள் மட்டுமே இறுதி தேர்விற்கு சேர்க்கப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படடையிலேயே தேர்வுகள் நடத்தப்படும். உள்மதிப்பீடு மற்றும் புராஜெக்ட் பணிகளுக்கு 70% மற்றும் ஆன்லைன் தேர்விற்கு 30% வெயிட்டேஜ் கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எளிதாக தேர்வை எதிர்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: கண்கள் இருண்டாலும், தன்னம்பிக்கை இருளவில்லை… யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற பூரண சுந்தரி