தமிழ்நாட்டில் 1.2.2022 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை வார இறுதியில் தொடர்ந்து அமல்படுத்துவது குறித்தும் வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு வழங்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.1.2022) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிப்ரவரி 01 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்பட அனுமதி. ஆனால் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

இனி இரவு நேர ஊரடங்கும், வார இறுதியில் முழு முடக்கமும் கிடையாது. அரசு, தனியார் நடத்தும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. உணவு விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி.

உள் விளையாட்டு அரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி. அதே சமயம், உள் அரங்குகளில் நடத்தப்படும் இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 சதவீத பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இறப்பு நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 பேர் மட்டும் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கேளிக்கை பூங்காக்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. துணி, நகை கடைகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதி மற்றும் சமுதாய, அரசியல், கலாசார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.