நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி அவருடன் நெருக்கமாகப் பழகியதாகவும், அவருக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்து பின்னர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றி விட்டதாகவும்,

இதுகுறித்துக் கேட்டபோது கொலைமிரட்டல் விடுத்து, தன்னுடன் பழகியபோது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை சாந்தினியின் புகாரின் பேரில் அடையார் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மணிகண்டன் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி ஆன நிலையில், தற்போது ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தவறானவை. உண்மைக்குப் புறம்பானவை. திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை.

எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. நான் கடன் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தைக் கேட்டபொழுது இந்தப் பிரச்சினை ஏற்பட்டது, மற்றபடி நான் நிரபராதி. எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் ஆஜராகி வாதிட்டாா். அப்போது காவல்துறை தரப்பில் ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் இன்று (7-07-2021) முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிகண்டனின் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலியல் புகார்; முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் போலீஸ் காவலில் தீவிர விசாரணை