உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் யோத்தி பிரச்சனையை 24 மணி நேரத்தில் தங்களால் தீர்க்க முடியும் என ஒர் பேட்டியில் தெரிவித்தது அறிந்ததே
 
மேலும் அவர் தேவை இல்லாமல் இதில் காலம் தாழ்த்தக் கூடாது என்றும் மக்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இல்லை என்றால் இந்த விவகாரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதை 24 மணி நேரத்தில் தீர்க்க தங்களால் முடியும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
 
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ், கடன் தொல்லையால் துன்பப்படும் விவசாயிகளை முதலில் முதலமைச்சர் காப்பாற்றட்டும் என்று குறிப்பிட்டார்.
 
தொண்ணூறு நாட்களில் விவசாயிகளின் சிக்கலை முதலமைச்சர் தீர்க்க வேண்டும் என்றும் அகிலேஷ் வலியுறுத்தினார். குடியரசு நாளில் இராமர் கோவில் விவகாரத்தைப் பேசிய முதலமைச்சர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்றும் அகிலேஷ் விமர்சித்தார்.
 
இந்த சூழலில் அயோத்தி நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான அரசியல் சாசன அமர்வு விசாரணை வரும் 29-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
 
பாபர் மசூதி இடிப்பின் காரணமாக  அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கடந்த 2010-ம் ஆண் டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இதை எதிர்த்து 14-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் கடந்த 8ந் தேதி உத்தரவிட்டது.
 
மேலும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ.பாப்டே,என்.வி.ரமணா, யு.யு.லலித் மற்றும் சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜனவரி 10ம் தேதி முதல் இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரித்து, 2 மாதங்களில் முடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகி, ‘‘பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது உத்தரப் பிரதேச முதல்வராக கல்யாண் சிங் இருந்தார்.
 
அப்போது இந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக, தற்போது அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி யுயு.லலித் வழக்கறிஞராக ஆஜராகி வாதிட்டார். எனவே, இந்த அரசியல் சாசன அமர்வில் அவர் இடம் பெறுவது ஏற்புடையது அல்ல’’ என்றார்.
 
இதை கேட்ட நீதிபதி யுயு.லலித், இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “நிர்வாக ரீதியான விஷயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த அரசியல் சாசன அமர்வு நியமிக்கப்பட்டது. இதில், இப்படி ஒரு சூழல் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.
 
இந்த வழக்கை பொருத்தவரை, 130 சர்ச்சைகள் உள்ளதாகவும், 88 முக்கிய சாட்சியங்கள் உள்ளதாகவும் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்த அனைத்து விளக்கங்களும் 13 ஆயிரத்து 886 பக்கங்கள் கொண்டுள்ளது. இதை நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் மொழிமாற்றம் செய்து வருகிறது’’ என்றார்.
 
அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர், ‘‘அதற்கு இரவு பகலாக உதவி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்’’ என்றார்.
 
ஆனால், அதை நிராகரித்த தலைமை நீதிபதி, ‘‘அயோத்தி நில வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விரைவில் அமைக்கப்படும்.
 
அதில் இடம் பெறும் நீதிபதிகளின் பெயர்கள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் வரும் 29-ம் தேதி அயோத்தி நிலவிவகார மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்தே அன்று வர முடியாத நிலையில் இருப்பதால், அன்று நடைபெறும் விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த விசாரணை நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.
 
இதனால் 2019 தேர்தலுக்கு முன்னால் வழக்கு விசாரனை நடக்க முடியாமல் போகலாம் என்பதால் ஐந்து வருடம் மோடி உள்ளிட்ட பாஜகவினர்  ராமர் கோவில் கட்டுவதில் எந்த ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லை என ஹிந்துவா அமைப்பினர் கோபத்தில் உள்ளதால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் உத்திரபிரதசே முதல்வர் யோகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன..