விழுப்புரத்தில் பாஜக மாவட்ட தலைவர் மீது பாலியல் புகார் அளித்த மகளிர் அணி செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரத்தை சேர்ந்த காயத்ரி பாஜக மாவட்ட மகளிரணி செயலாளராக உள்ளார். இவரை பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் மகளிரணி பொதுச்செயலாளர் பதவி வாங்கி தருவதாக ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், 5 லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகனிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் கடிதமும், காயத்ரி, கலிவரதனுடன் பேசியதாக ஆடியோ பதிவுகளும் இணையத்தில் வைரலாகின. தொடர்ந்து, அரசியல் வாழ்க்கை என்ற பெயரில் தனது வாழ்க்கையை கலிவரதன் அழித்து விட்டதாக காயத்ரி பேசும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த புகாரின் மீது பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் மீது விழுப்புரம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார் காயத்ரி. அந்த புகாரில், விஏடி கலிவரதன் மகளிர் அணி பொதுச்செயலாளர் பதவி வாங்கித் தருவதாக ஆசை காட்டி, 5 லட்சம் ரூபாயை தன்னிடம் இருந்து பறித்துள்ளார்.

மேலும் சென்னையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது தன்னை அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிர் அணி செயலாளர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிரணி செயலாளர் காயத்ரி கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக பாஜக மாநில தலைமை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் தற்போதைய பாஜக தலைவராக இருக்கும் கலிவரதன், 2006-ம் ஆண்டு பாமக கட்சியின் சார்பில் முகையூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சசிகலா திடீர் விண்ணப்பம்