சீன நிறுவனமான விவோ தொடர்ந்து ஐபிஎல் ஸ்பான்சர்களாக நீடிப்பார்கள் என்று பிசிசிஐ அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சில பாஜக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சீன உணவுகளை இந்தியர்கள் உண்பதையும், தயாரிப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் பேசினார். இந்நிலையில், ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்களாக சீன நிறுவனம் விவோ நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், “நாங்கள் இதுபற்றி எதுவும் தீர்மானிக்கவில்லை. சீன நிறுவனங்களுக்கு உதவுதல் என்பதற்கும் சீனநிறுவனத்திடமிருந்து பயன்பெறுவதற்குமான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க: சீனாவை எதிர்க்க வட கொரிய அதிபரின் உருவ பொம்மை எரித்துப் போராடிய பாஜகவினர்

இந்திய நுகர்வோரிடமிருந்து சீன நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது, அதில் ஒரு பங்கை பிசிசிஐக்கு ஐபிஎல் ஸ்பான்சர்களாகச் செலுத்துகிறார்கள். அவர்களிடமிருந்து பெறும் பணத்திற்கு பிசிசிஐ 42% வரி செலுத்துகிறது. எனவே இது நம் நாட்டுக்கு சாதகமானது தானே தவிர சீனாவுக்குச் சாதகமானதல்ல” என்று தெரிவித்துள்ளார். விவோ நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சரை 5 ஆண்டுகளுக்கு ரூ.2,199 கோடிக்குப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷாவின் மகன். ஜெய் ஷா முக்கியப் பொறுப்பு வகிக்கும் அமைப்பே சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பை நீக்க மறுக்கும் நிலையில், பாஜக ஆதரவாளர்களின் சீன தயாரிப்புகள் எதிர்ப்பு பிரசாரம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதனிடையே சீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிவு செய்துள்ளன. மேலும், உ.பி மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் பட்டியலையும் சமர்ப்பிக்கும்படி வர்த்தக சங்கங்களிடம் மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது..