பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இம்ரான் கான் மீது ஊழல், பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் ஊழல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று (09.05.2023) நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவரது காரை சுற்றி வளைத்த ரேஞ்சர்கள், அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் மூத்த அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் சுமத்தியதாக ராணுவம் தெரிவித்த மறுநாள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் இருந்து ரேஞ்சர்கள் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இம்ரான் கானை தாக்கியதாகவும் பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி குற்றம்சாட்டி உள்ளார். அதேபோல் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் கைதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைதை கண்டித்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில் காவல்துறையினருக்கும், போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், லாகூர், ராவல்பிண்டி, பைசலாபாத், முல்தான், குஜ்ரன்வாலா உள்பட அனைத்து நகரங்களிலும் வன்முறை வெடித்தது. போராட்டம், வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனாலும் இம்ரான்கான் கட்சியினர் தொடர்ந்து போராட்டம், வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்ரான்கான் விடுதலையாகும் வரை நாடு தழுவிய போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி, இம்ரான்கான் கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக தெரிவித்து உள்ளது.