1985ம் ஆண்டு “சென்னை பறக்கும் ரயில் திட்டம்” அமைக்க திட்டமிடப்பட்டு, 1991ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கியது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து கோட்டை, பூங்காநகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி வரை 20 கி.மீ. தூரம் ரயில் பாதை அமைக்கும் பணிகள் 1997ம் ஆண்டு முடிவடைந்து, இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டது.
 
இதையடுத்து 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சென்னை வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிப்பதற்காக நில உரிமையாளர்களுடன் அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்படுவதற்காக உயர்நீதிமன்றம் அமைத்த குழு உரிமையாளர்களுடன் சில நாட்களுக்கு முன் பேச்சு வார்த்தை நடத்தியது. சதுர அடி ஒன்றிற்கு சந்தை மதிப்பு விலையை வழங்கினால் மட்டுமே நிலத்தை கொடுப்போம் என்று உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
 
ஆனால் எப்படியாவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில் அதிகாரிகள் இன்று நில உரிமையாளர்களை சந்தித்தனர்.
சென்னையில் கடற்கரையில் இருந்து மைலாப்பூர் வழியாக வேளச்சேரி வரை ஏற்கனவே பறக்கும் ரயில் பாதை செயல்பட்டு வருகிறது. இதனை பரங்கிமலை வரை நீடிப்பதற்கான திட்டம் போடப்பட்டு 75% பணிகளும் முடிவடைந்து விட்டன. ஆனால் ஆதம்பாக்கம் முதல் பரங்கிமலை வரை சுமார் 500மீட்டர் தொலைவிற்கு நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதால் 10 ஆண்டுகளாக வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் அமைப்பு வேலை முடங்கியுள்ளது.
 
ஆதம்பாக்கம் குடியிருப்புவாசிகள் சதுர அடிக்கு ரூ.6,500 இழப்பீடு கேட்டனர். சதுர அடிக்கு ரூ.3,740 மட்டுமே தர முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.
 
இதனை தொடர்ந்து 3-வது கட்டமாக இன்று நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.
 
மேலும், கடற்கரை – வேளச்சேரி வரை உள்ள 18 ரயில் நிலையங்களும் பராமரிப்பே இல்லாமல் பாழடைந்த பங்களா போல் காட்சி அளிப்பது பற்றி பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.
 
ஆதம்பாக்கம் குடியிருப்புவாசிகள் டிச.12-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர். பறக்கும் ரயில் திட்டத்திற்கு தேவையான நிலம் 37 குடும்பங்களிடம் உள்ளது. 37 குடும்பங்களை சமாதானப்படுத்த முடியாமல் ரயில்வே தவித்து வருகிறது.