ஜெடிஎஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் பீகார் மாநிலம் முசாப்பர்பூரில் அரசு உதவிப்பெறும் பெண் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல், போதைப்பொருள் உட்செலுத்துதல் போன்ற கொடூரமான துன்புறுத்தல்களை எதிர்க்கொண்டது வெளியுலகிற்கு தெரியவந்தது.
 
இதுதொடர்பான வழக்கு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இப்போது மாநிலத்தில் செயல்பட்டுவரும் காப்பகங்களில் சிறுமிகள் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லைக்கு உள்ளானது தொடர்பான 16 வழக்குகளை சிபிஐக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.
 
இதில் பல்வேறு பீகார் ஆளும் அரசு அதிகாரிகள் ., முக்கிய கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் .,   பீகாரில் மாநில குழந்தைகள் காப்பக வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கூடாது என்று அம்மாநில அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
 
முசாப்பர்பூர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐயிடம் விசாரணையின் நிலையறிக்கையை ஜனவரி 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்ட உச்சநீதிமன்றம், காப்பக வழக்குகளில் தொடர்புடைய அதிகாரிகளை எங்களுடைய அனுமதியின்று இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
 
காப்பகங்களில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பீகார் மாநில போலீஸ் வழக்குப்பதிவு செய்தபோது கடுமையான பிரிவுகளின் கீழ் பதிவு செய்யவில்லை என்பதை கண்டுபிடித்த உச்சநீதிமன்றம் கடுமையாக கடிந்துக்கொண்டது.
 
இந்திய தண்டனை சட்டத்தின் கடுமையான பிரிவுகளை இணைக்காதது மிகவும் வெட்கக்கரமானது, மனித தன்மையற்ற செயலாகும் என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.