நடிகர் ரஜினி வீட்டிற்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் என்பது சைபர் கிரைம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து மிரட்டியுள்ளார். அத்தகவலை மட்டும் கூறிய அவர் உடனே தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது வீட்டில் வெடிகுண்டு இல்லை எனவும் வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் தான் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுவன் குறித்து விசாரிக்கையில், அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று தெரியவந்துள்ளது. சிறுவன் விளையாட்டாக செய்ததாக சிறுவனின் குடும்பத்தினர் கூற அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுப்பதா.. வேண்டாமா.. என்பது குறித்து போலிஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க: ஒரே வாரத்தில் ஊர் பெயர்கள் மாற்றம் தொடர்பான அரசாணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்நிலையில், அந்த சிறுவனின் தந்தை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் உருக்கமாக, ரஜினிகாந்த சார்.. நானும் உங்களது ரசிகர் தான். நீங்கள் நடித்த எந்த திரைப்படம் வெளியானாலும் முதலில் ஓடிச்சென்று தியேட்டரில் பார்க்க கூடிய ஒரு ரசிகர்.

பையன் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டவர். வீட்டில் இருந்து செல்போனை எடுத்து உங்களுக்கு போனில் தொந்தரவு கொடுத்து விட்டார். எனவே அவனை மன்னித்துவிடுங்கள். உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

மற்றொருபுறம், ரஜினி தனது அரசியல் வருகை குறித்து பேசிய போது போர் வரட்டும் அப்போது களம் இறங்கலாம் என சொன்னாறே தற்போது இந்தியா – சீனா நாடுகளுக்கு நிலவும் பதற்றத்தை சுட்டிக்காட்டி ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை சம்மந்தப்படுத்தி சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் செய்து விமர்சித்து வருகின்றனர்.