தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணன் விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியாகி உள்ள நிலையில், சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக செபி குற்றஞ்சாட்டியது தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில், தேசியப் பங்குச்சந்தையின் வணிக திட்டங்கள், பங்குச் சந்தையின் ஏற்றம், இறக்கம் குறித்த கணிப்புகள், ரகசியங்கள் என பலவற்றையும் இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவருடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டது உறுதியானது.

மேலும் அந்த சாமியார் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். அந்த சாமியாரின் ஆலோசனைப்படி சென்னையைச் சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை செயலாக்க அதிகாரியாகவும், ஆலோசகராகவும் சித்ரா ராமகிருஷ்ணா நியமித்துள்ளார்.

சித்ரா ராமகிருஷ்ணா விதிமுறை மீறலில் ஈடுபட்டு உறுதியானதையடுத்து, அவருக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன், சிஓஓ ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கும் தலா ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக என்எஸ்இ-யில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக மும்பை சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணன் முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (5.3.2022) சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.