நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ‘வரனே அவசியமுண்டு’ என்ற மலையாள படத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இழிவு செய்யும் விதமாக காட்சி இருப்பதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அக்காட்சியை உடனடியாக நீக்க வேண்டுமென கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில், மலையாள சினிமாக்களில் தமிழர்களை கொச்சைப்படுத்துவதாக ஒரு வாதம் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த ‘வரனே அவசியமுண்டு’ படத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பெயரை பயன்படுத்தியதுதான்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள நடிகர் துல்கர் சல்மான், “நிறைய மக்கள் பிரபாகரன் ஜோக்கை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அது வேண்டும் என்று பயன்படுத்தப் பட்டது அல்ல. இது பழைய மலையாள படமான பட்டன பிரவேஷம் என்ற படத்தை சார்ந்து எடுக்கப்பட்ட ஜோக். மேலும் இது கேரளாவில் மிகவும் வழக்கமான ஒரு தொடர். எனவே யாரையும் காயப்படுத்தும் நோக்கில் இது எடுக்கப்பட்டது இல்லை.

மேலும் வாசிக்க: சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய தயாரிப்பாளர்கள்- ‘பொன்மகள் வந்தாள்’ சர்ச்சை

பலரும் படத்தைப் பார்க்காமலேயே தவறாக கணித்து வதந்தி பரப்பி வருகின்றனர். என்னையும் எனது இயக்குனரையும் காயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் இதனால் மனவருத்தம் அடைந்த தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு காமெடி மட்டுமே” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “வரனே அவசியமுண்டு என்னும் மலையாள திரைப்படத்தில் மேதகு பிரபாகரன் அவர்களை அவமதிக்கும் வகையில் ஒருகாட்சி இடம்பெற்றுள்ளது. இது தமிழ் உணர்வாளர்களை வெகுவாகக் காயப்படுத்தியுள்ளது. இப்படக்குழுவினரின் இழிபோக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடிகர் துல்கர் சல்மான் அக்காட்சிக்காக மன்னிப்புக் கோரியிருக்கிறார் என்றாலும், அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.