திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரதான அர்ச்சகர் சீனிவாசார்யாலு கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், இதுவரை திருப்பதியில் அர்ச்சகர்கள் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து, அர்ச்சகர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 1,93,894 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் மட்டும் 14,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உள்ளது. இதனால், திருப்பதி உட்பட சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 5 வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் மட்டும் 7000 பேருக்கு மேல் கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் திருமலையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் உள்ளிட்ட 190க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் தற்காலிக பிரதான அர்ச்சகரும், கோவிந்த ராஜசாமி கோயிலில் நிரந்தர அர்ச்சகராகவும் இருந்து வந்த சீனிவாசார்யாலு (வயது 45) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அர்ச்சகர் சீனிவாசஆச்சாரிலு கொரோனாவுக்கு இதுவரை 3 அர்ச்சகர்கள் பலியானதால் ஏழுமலையான் கோயிலில் வேலை பார்க்கும் மற்ற அர்ச்சகர்கள் அச்சமடைந்துள்ளனர்.

முன்னதாக ஜூலை 20 திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ஸ்ரீனிவாச மூர்த்தி கொரோனாவிற்கு பலியானார். தொடர்ந்து ஜூலை 21 தலைமை ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: திருப்பதி கோயிலில் கொரோனாவிற்கு 2வது பலி; 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்