தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் அமலுக்கு வரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைப்பது தொடர்பாக சென்னையில் இன்று (18.07.2022) செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகத் தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் இல்லை. 42 சதவீத மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை. 2 மாதங்களில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 காசு மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கட்டணத்தை உயர வாய்ப்பு உள்ளது. அதேபோல், 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதங்களுக்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களில் 401 – 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.297.50 உயர்த்தப்படும். 501- 600 யூனிட்கள் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 அதிகரிக்கக் கூடும். மேலும் 601 – 700 யூனிட்கள் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்படும். ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 65 காசுகள் உயர்த்தப்படும்.

சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் விட்டுக் கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. உதய் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் மின்வாரியத்துக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. ஓராண்டில் மின்வாரியத்தை மேம்படுத்தி ரூ.2200 கோடி வட்டி சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் நெருக்கடியில் இருக்கும்போது ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக 28 முறை கடிதம் எழுதியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கடன் ஏதும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில்தான் பொதுமக்களுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைந்த அளவிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் கடும் நெருக்கடி காரணமாக 8 வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மின்கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.

மேலும், மின்சார வாரியம் உத்தேசித்துள்ள இந்த கட்டண உயர்வு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரே அமலுக்கு வரும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.