தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மின்சார வாரியத்தின் மின் கட்டண உயர்வு தொடர்பான மனுக்களை ஏற்றுக்கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்களை சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடத்தியது. இந்த கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குநர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜி.சீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் உறுப்பினர் மட்டும் உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.

தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல ஆண்டுகளாக மின் கட்டண உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எடுத்துள்ள நடவடிக்கையை தாமதப்படுத்துவது ஆபத்தில் முடியும். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், “தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட உறுப்பினராக இருந்த வெங்கிடசாமி, கடந்த 17.2.2019 அன்று நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த 5.5.2022 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். மற்றொரு உறுப்பினராக இருந்தவர் கடந்த மார்ச் 17 ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார்.

இரு காலியிடங்களையும் ஒரே நேரத்தில் தமிழக அரசு நிரப்பி இருக்கலாம். ஒரு ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் இருப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை பின்பற்றுவது உயர்நீதிமன்றங்களின் கடமையாகும்.

அப்படி இருக்கும்போது, அந்த பதவிக்குரிய நபரை நியமிக்காதது நியாயம் இல்லை. ஆணையத்தில் உறுப்பினர் மற்றும் சட்டத்துறை உறுப்பினர் பதவிகளுக்கான நபர்களை ஒரே நேரத்தில் நியமிப்பதற்கு மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதை செய்யவில்லை.

இதனால் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை அமலில் இருக்கும். நியமனத்திற்கு பிறகு தடை நீங்கிவிடும். அதே நேரத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தலாம்.

மேலும் மனுதாரர்கள் தங்களது ஆலோசனைகள்/ ஆட்சேபனைகளை ஆணையத்தின் முன் தெரிவிக்காமல் நீதிமன்றத்தை அணுகியதால், மனுதாரர்கள் தங்கள் ஆட்சேபனைகள்/ ஆலோசனைகளை ஆணையத்தின் முன் வைக்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது” என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.