ஜோஹோ (zoho) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு தன்னையும், ஆட்டிசம் குறைபாடு உள்ள தனது மகனையும் நிர்கதியாக விட்டு சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்த்து வந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டார். இங்கிருந்து கொண்டு தனது பணியைக் கவனித்து வருகிறார்.

இவரின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில், ஜோஹோவின் செயல்பாட்டு வருவாய் ரூ.5,230 கோடியிலிருந்து ரூ.6,711 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.1918 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் 12000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஆட்டிசம் குறைபாடு உள்ள தன் மகனையும், தன்னையும் 2019 ஆம் ஆண்டு நிர்க்கதியாக விட்டுச் சென்று விட்டதாக ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இந்த செய்தியை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அவரது மனைவி பிரமிளா போர்ப்ஸ் (Forbes) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “நானும் எனது கணவர் ஸ்ரீதன் வேம்பும் 29 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தோம். கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு கலிபோர்னியாவில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஸ்ரீதர், என்னையும், மகனையும் நிர்கதியாக விட்டுவிட்டார். என் மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பும், உடல் ரீதியாக சில பாதிப்புகளும் உள்ளது.

ஸ்ரீதர் இது தெரிந்தும் எங்கள் இருவரையும் கவனித்துக் கொள்ளவே இல்லை. கலிபோர்னியாவில் என்னுடன் வாழ்ந்த காலத்திலேயே எங்களுக்கு பொதுவாக இருந்த சொத்துக்களை அவரது சகோதரி மற்றும் சகோதரி கணவர் பெயருக்கு வேம்பு மாற்றிவிட்டார்.

கலிபோர்னியாவின் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் சொத்துக்களைக் கணவர் விற்க முடியாது. வேம்பு தனது உறவினர் பெயர்களில் சொத்துக்களை மாற்றியது சட்டவிரோதமானது” என ” என குற்றம் சாட்டியுள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மனைவியின் இந்த குற்றச்சாட்டுக்கு ஸ்ரீதர் வேம்பு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, “என் மீது தனிப்பட்ட முறையில் மிக மோசமான தாக்குதல் தொடுக்கப்பட்டுவரும் நிலையில், அது குறித்து விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது மிகவும் வலி மிகுந்த ட்விட்டர் பதிவுத் தொகுப்பு. என் தொழில் வாழ்க்கைக்கு முற்றிலும் முரண்பட்ட, துயர்மிகுந்ததுதான் என் தனிப்பட்ட வாழ்க்கை. ஆட்டிசம் எங்கள் வாழ்வைச் சீரழித்துவிட்டது. தற்கொலை எண்ணம் ஏற்படுமளவுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நானும் எனது மனைவி பிரமிளாவும் ஆட்டிசத்திற்கு எதிராகப் போராடிவருகிறோம். அவர் மிகச் சிறந்த அன்னை. அவர் மிகுந்த அன்புடன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட எனது மகனை கவனித்துக்கொண்டிருக்கிறார். அவரோடு நானும் கடுமையாக இதில் ஈடுபட்டிருக்கிறேன்.

எனது மகனுக்கு அளிக்கப்பட்ட சில சிகிச்சைகளை நானும் எடுத்துக்கொண்டேன். அப்போதுதான் அந்த சிகிச்சைகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதற்காக இதைச் செய்தேன்.

எங்கள் மகனுக்கு தற்போது 24 வயதாகும் நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டுவந்த முடிவில்லாத சிகிச்சைகள் பெரிய பலனளிக்கவில்லை. அவர் நேசிக்கக்கூடிய மக்களுக்கு நடுவில் கிராமப்புற இந்தியாவில் இருந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேன். ஆனால், நான் அவரைக் கைவிடுவதாக மனைவி கருதினார். அந்த அழுத்தத்தில்தான் எங்கள் திருமணம் உடைந்தது.

துரதிர்ஷ்டவசமாக எங்கள் திருமண முறிவு, புதிய மோதலை ஏற்படுத்தியது. ஸோஹோ கார்ப்பரேஷனில் எனது உரிமைகள் குறித்து நிறுவப்படாத குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவர் முன்வைத்தார். ஊடகங்களை நாடவும் அவர் முடிவெடுத்தார். இந்த விவகாரம் தற்போது அமெரிக்காவில் நீதிமன்றத்தில் இருக்கிறது. என்னுடைய வாதங்கள் பொதுவில் உள்ளன.

என்னிடமிருந்த பங்குகளை நான் யாருக்கும் மாற்றவில்லை. எங்கள் 27 வருட வரலாற்றில் 24 வருடங்கள் நான் அமெரிக்காவில்தான் இருந்தேன். அந்த காலகட்டத்தில்தான் இந்தியாவில் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

பிரமிளாவையும் எனது மகனையும் நிதி ரீதியாக கைவிட்டுவிட்டேன் என்று சொல்வது முழுமையான கட்டுக்கதை. நான் வாழும் வாழ்வைவிட வசதியான வாழ்வையே அவர்கள் வாழ்கிறார்கள். நான் அவர்களை முழுமையாக ஆதரித்துவந்துள்ளேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில் எனது அமெரிக்க சம்பளம் எனது மனைவி வசம்தான் உள்ளது. எங்கள் வீட்டையும் அவருக்கே கொடுத்து விட்டேன். அவருடைய ஃபவுண்டேஷனையும் ஸோஹோ ஆதரித்து வருகிறது. நான் எப்போதுமே பிரமிளாவையும் எனது மகனையும் ஆதரித்து வந்துள்ளேன். வாழும்வரை தொடர்ந்தும் ஆதரிப்பேன். உண்மையும் நீதியும் வெல்லும் என நம்புகிறேன்” என்று விளக்கமளித்துள்ளார்.