டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, ஜகாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை டெல்லி மாநகராட்சி அகற்றி வருவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த மோதலை தடுத்த காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியது.

இந்த வன்முறையில் காவல்துறையினர் உள்பட பலர் படுகாயமடைந்தனர். அத்துடன் காவல்துறையினரின் வாகனம் உள்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார்.

இதனையடுத்து, இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அன்சார், உள்பட 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 2 பேர் சிறுவர்கள். இதில், அன்சார் உள்பட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் வன்முறை நடந்த ஜகாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று (20.4.2022) காலை ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற டெல்லி வடக்கு மாநகராட்சி சார்பில் 14 குழுக்களாக அதிகாரிகள் வந்திருந்தனர்.

வன்முறை நடந்த பகுதி என்பதால் 1500 காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்போடு மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்ததன் அடிப்படையில் 9 புல்டோசர்கள் கொண்டு கட்டடங்களை அதிகாரிகள் இடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜகாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டு வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளது. இதனையடுத்து 2 மணிநேரம் கழித்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

டெல்லி வடக்கு மாநகராட்சியின் அதிகாரம் என்பது பாஜகவிடம் உள்ளது. இதனால் தான் ஜஹாங்கிர்புரி பகுதியில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாஜக அரசின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி ஜஹாங்கிரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை என்பது இந்திய அரசியலமைப்பு விழுமியங்களை சிதைக்கும் செயலாகும், பாஜக அவர்களின் இதயத்தில் உள்ள வெறுப்பை புல்டோஸ் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.