டோங்காவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னையிலும் எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடல் என்றாலே கடலுக்கு அடியிலும், தீவுப் பகுதிகளிலும் நிலப்பரப்புகளில் ஏராளமான எரிமலைகள் அமைந்திருப்பது வழக்கம். உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடித்துக் கிளம்பி பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

கடந்த 14 ஆம் தேதி பசிபிக் நாடான டோங்காவில், கூங்கோ டோங்கா என்ற தீவின் அருகே கடலுக்கு அடியில் எரிமலை கடும் சீற்றத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. கடலுக்குள் சுமார் 250 கிலோ மீட்டர் சுற்றளவில் 20 கிலோ மீட்டர் உயர அளவுக்கு எரிமலை வெடித்தது சாட்டிலைட் புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எரிமலை வெடித்த பின்னர் கடலுக்கு அடியில் சுனாமி உருவாகி மிகப்பெரிய அலைகள் எழுந்தன. இதனையடுத்து டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எரிமலை வெடிப்பு காரணமாக சூரியனையே மறைக்கும் அளவுக்கு கரும்புகை எழுந்து தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இருளில் மூழ்கின. மேலும் தீவில் இருந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் நிலை என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை.

இந்த எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உலகின் பல நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக கூங்கோ டோங்கா தீவில் இருந்து 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னையிலும் எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து எட்டரை மணிக்குள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் அமைக்கப்பட்டுள்ள வளிமண்டல அழுத்தமானியில் டோங்கா எரிமலை வெடிப்பின் அதிர்வுகள் உணரப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக கடலில் ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த எரிமலை வெடிப்பின் பாதிப்புகள் வரும் காலங்களில் ஏராளமான வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.