சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நவம்பர் மாதத்தில் ரூ.97,637 கோடியாக குறைந்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
 
நடப்பாண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், நவம்பரில் அதன் வசூல் ரூ.97,637 கோடியாக சரிவைக் கண்டுள்ளது.
 
வசூலிக்கப்பட்ட மொத்த தொகையில், மத்திய ஜிஎஎஸ்டி ரூ.16,812 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.23,070 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.49,726 கோடியாகவும் (இறக்குமதி மீதான வசூல் ரூ.24,133 கோடி உள்பட), தீர்வை ரூ.8,031 கோடியாகவும் (இறக்குமதி வசூல் ரூ.842 கோடி உள்பட) இருந்தன.
 
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலான தொகையிலிருந்து, ரூ.18,262 கோடி மத்திய ஜிஎஸ்டிக்கும், ரூ.15,704 கோடி மாநில ஜிஎஸ்டிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
 
நவம்பர் 30 நிலவரப்படி ஜிஎஸ்டிஆர் 3பி படிவங்களை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 69.6 லட்சமாக இருந்தது. மேலும், ஏப்ரல்-செப்டம்பர் வரையில் மாநிலங்களுக்கு ரூ.11,922 கோடி மதிப்பிலான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
 
ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.03 லட்சம் கோடியாகவும், மே மாதத்தில் ரூ.95,016 கோடியாகவும், ஜூனில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலையில், ரூ.96,483 கோடியாகவும், ஆகஸ்டில் ரூ.93,960 கோடியாகவும், செப்டம்பரில் ரூ.94,442 கோடியாகவும், அக்டோபரில் ரூ.1,00,710 கோடியாகவும் இருந்தது.
இதன் மூலம் மத்திய அரசு இந்த ஆண்டில் தனது திட்ட இலக்கை நிறைவேற்றுவது கடினம் என பொருளதார வல்லுனர்கள் தெரிவித்தனர்