சுவாதி கொலை வழக்கை மையமாக கொண்டு ‘நுங்கம்பாக்கம்’ படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன். இவர் விஜயகாந்த் நடிப்பில் உளவுத்துறை, சத்யராஜ் நடித்த கலவரம், அருண்விஜய் நடித்த ஜனனம், தலைவன் மற்றும் வஜ்ரம் உட்பட படங்களை இயக்கியவர்.

சுவாதி கொலை வழக்கை அதன் பின்னணியில் நடந்த உண்மைகளை ஆராய்ந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல தடைகளை கடந்து இப்படம் வருகிற 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வெளியிட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர் காவல் துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து, தலித் சமூகத்திற்கு எதிராகவோ, ராம்குமாருக்கு எதிராகவோ, சுவாதிக்கு எதிராகவோ இப்படம் எடுக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்து, இயக்குனர் ரமேஷ் செல்வனும், தயாரிப்பாளர் ரவிதேவனும் முறையிட்டனர்.

இப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், சுவாதி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த படம், ‘சுவாதி கொலை வழக்கு’ என்கிற பெயரில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பிய சூழலில் நுங்கம்பாக்கம் என்று பெயர் செய்யப்பட்டுள்ளது. ஊர்பெயர்கள், நபர் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தோடு மாறுபடாமல் கதையோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுவாதி கொலை வழக்கில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளை, விவாதப்படுத்த வேண்டும். மீண்டும் அதை உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும் என்ற நோக்ககத்தில் இப்படத்தை இயக்கி இருக்கிறேன் என்று விளக்கம் தெரிவித்து, படத்தை திரையிடுவதற்கு முன்னதாக நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். அதில் உங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ராம்குமார் இந்த கொலையை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கருத்துக்களை வைத்தோம். சுவாதியின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினோம். அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறினோம். இந்த வாதங்கள் அனைத்தும் இந்தத் திரைப்படத்தில் பதிவாகி இருக்கிறது.

தனி ஒரு ஆளாக ராம்குமார் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிற சூழல் இருக்கிறது. அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இஸ்லாமிய இளைஞரோடு பழக்கம் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட பல கருத்துக்கள் பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற கருத்துக்கள், அல்லது ராம்குமாருக்கு ஆதரவாக பேசப்படுகிற கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

படம் நிறைவடைகிற போது ராம்குமார் கொலையாளி என்று நிரூபிக்க கூடிய வகையில் படத்தின் போக்கு அமைகிறது. தனிப்பட்ட முறையில் அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த கருத்திலே நான் மாறுபடுகிறேன்.

சுவாதி கொலையின் பின்னணியில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக நான் கருதுகிறேன். அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள். ராம்குமாருடைய சாவும் சந்தேகத்திற்கு உரியது தான் என்பது என்னுடைய மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்து.

அதிகாரிகள் தரப்பிலே சொல்லப்படுகிற கருத்துக்களையும், வாதங்களையும், ராஜ்குமார் குடும்ப தரப்பில், அல்லது அவரது தரப்பில் சொல்லப்படுகிற வாதங்களையும் தவறாமல் அவர் வைத்திருக்கிறார். அந்த வகையிலே அது ஆறுதலைத் தருகிறது. அந்த உண்மை சம்பவம் ஒரு நூலிழை போல் இருந்தாலும், அதை வைத்து ஒன்னே முக்கால் மணி நேரம் ஒரு நீண்ட திரைப்படத்தை அவருக்கே உரிய பாணியில் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இயக்கி இருக்கிறார் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.