சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள பாடப் புத்தகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடுத்தி, புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது, அவரது உருவத்தை மாற்றுவது என பாஜக அரசு தொடர்ந்து திருவள்ளுவரை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வேலைகளில் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 8-ஆம் வகுப்பு இந்தி புத்தகத்தில் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. Macmillan Publishers India Pvt. Ltd எனும் பதிப்பகம் அச்சிட்டு வெளியிட்டுள்ள சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 8ஆம் வகுப்பு இந்தி புத்தகத்தில், ஒரு பாடப் பகுதியில் வாசுகியுடன் திருவள்ளுவர் இருப்பது போன்று படம் உள்ளது.

அதில் திருவள்ளுவருக்கு காவி உடுத்தி, முடிகள் மழிக்கப்பட்டு குடுமி வைத்து, நெற்றியில் திருநீர் பூசி கழுத்து கைகளில் ருத்ராட்ச மாலை அணிவித்து சித்தரிக்கப்பட்டுள்ள படம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வள்ளுவரின் இந்த சர்ச்சை படத்திற்கு திமுக தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்!

பாஜக அரசு அனுமதிக்கிறது; அடிமை அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள திமுக பொறுக்காது. எச்சரிக்கை!” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த புகைப்படத்தை மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தகத்தை அச்சிட்ட Macmillan Publishers India Pvt. Ltd பதிப்பகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, திருவள்ளுவருக்கு சாதி, மத அடையாளங்களை பூசும் வகையில் தமிழக பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றயது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்துத்வா கும்பல் திருவள்ளுவர் சிலைக்கு காவி அடையாளம் பூசி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாது சமீபத்தில் நாட்டின் துணை குடியரசுத் தலைவராக உள்ள பாஜகவின் வெங்கையா நாயுடு, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தனது ட்விட்டர் பதிவில் காவி உடையில் உள்ள திருவள்ளுவரின் புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது பதிவை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

11வது நாளாக தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை; தடுமாறும் பொதுமக்கள்