தமிழகத்தில் தமிழுக்கு பதில் இந்தியும், சமஸ்கிருதமும் மட்டுமே கட்டாயப் பாடம் என முதல் தகவல் அறிக்கை (ஆர்டிஐ) மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றிய அரசியின் பணிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகள் கட்டாயம் என்றும், தமிழ் மொழிப் பாடமும், தமிழாசிரியர்களும் இல்லை என ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கையில், அரசு திட்டங்களை அறிவிக்கும் போது என திருக்குறளை கூறிவிட்டு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தொடர்ந்து திணிக்கும் வேலைகளில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது என பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி அளித்திருக்கும் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

[su_image_carousel source=”media: 22236,22235,22234″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட 16 கேள்விகளுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கம் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி பஅளித்துள்ள பதிலில், “தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு மேல் தமிழ் மொழி கட்டாயப்பாடம் இல்லை. 49 பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை.

மாறாக அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி கட்டாயம். பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

தமிழை மொழிப் பாடமாக கற்பிக்கப்படும் பள்ளிகள் தமிழ்நாட்டில் எத்தனை உள்ளன எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘எதுவுமில்லை (NIL)’ என்றும், தமிழை மொழிப்பாடமாக தேர்ந்தெடுக்க முடியுமா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்றும், மேலும் பிற செம்மொழிகள் ஏதும் கற்பிக்கப்படுகிறதா என்பதற்கும் ‘இல்லை’ பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் இருந்து ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்றுக் கொடுக்கப்படும் என கடும் கட்டுப்பாடுகளுடன் வெளியான உத்தரவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தற்போது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கவும், கட்டாயமாக கற்கவும் உத்தரவிட்டு சம்ஸ்கிருத, இந்தித் திணிப்பை தமிழகத்தில் அறவே கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

NLC தேர்வில் தேர்ச்சிபெற்ற 1,582 பேரில் 8 பேர் மட்டுமே தமிழர்கள்.. திமுக கடும் கண்டனம்