தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், மயிலாடுதுறை ,நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,

அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,நெல்லை, மதுரை, தஞ்சை ,திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

இன்று காலை முதலே சென்னை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 3 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்பு அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “பொதுமக்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்! தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம்.

மேலும் கனமழை காரணமாக இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது நீர்நிலைகளில் குளிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலும் அசராத குடிமகன்கள்; உச்சம் தொட்ட டாஸ்மாக் விற்பனை