ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடி தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த நிகழ்ச்சியின் போது, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையும் வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “விளையாட்டுத் துறையை விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அது விளையாட்டாக போய்விடும். விளையாட்டாக போய் விடக்கூடாது என்பதால் தான் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு உடல் உறுதியும் ஊக்கமும் அவசியம். திமுக தேர்தல் அறிக்கையில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தோம். நிச்சயம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டிற்கு பெருமை. விளையாட்டுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்தால் அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை.

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 7 தமிழக வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பதில் பெருமகிழ்ச்சி. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீர‌ர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும். வெள்ளி பதக்கம் வென்றால் ரூ.2 கோடியும், வெண்கல பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும் வழங்கப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். விளையாட்டு வீரர்களின் தேவைகளை அறிந்துள்ளதால் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CAG அறிக்கையால் அம்பலமான அதிமுக ஆட்சியின் ‘பகீர்’ மின்சார ஊழல்!