தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருப்பவர் இயக்குனர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஸ், அதிதிராவ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் “செக்க சிவந்த வானம்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.

செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் செக்க சிவந்த வானம் டிரெய்லர் வெளியாகிய ஒரே நாளில் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மணிரத்னம் இயக்கம் மற்றும் முன்னணி கதாபாத்திரங்களுக்காகவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான போஸ்டரை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் விஜய்சேதுபதி, அதிதி ராவ்வைத் தவிர மற்ற நடிகர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல அமைந்துள்ளது.

இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்புக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளனர். அரவிந்சாமிக்கு ஜோதிகா மற்றும் அதிதிராவ் ஜோடியாக நடித்துள்ளனர்.

“செக்க சிவந்த வானம்”படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ‘காவாப்’ என்ற பெயரில் வெளிவருகிறது. அதற்கான டிரெய்லரையும் லைகா நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டது.