சிரித்தபடியே பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்த சிறுவன், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 4வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பள்ளி, கல்லூரிகளும் தற்போது விடுமுறை என்பதால் பிள்ளைகள் வீட்டிலேயே விளையாடி வருகின்றனர்.

பொதுவெளியில் நண்பர்களுடன் இயல்பாக விளையாட முடியாத சூழல் உள்ளதால், ஆன்லைன் விளையாட்டிலேயே மூழ்கி உள்ளார்கள். குறிப்பாக, பப்ஜி, லூடோ போன்ற விளையாட்டுக்கள் தான் பள்ளி, கல்லூரி மாணவர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஈரோட்டில் கருங்கல்பாளையத்தில் உள்ள கமலா நகரை சேர்ந்த 16 வயது சிறுவன், தற்போது தான் பாலிடெக்னிக் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டு பக்கத்தில் உள்ள திடலில் உட்கார்ந்து செல்போனில் பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளான்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நன்றாக விளையாடி கொண்டிருந்த சிறுவன், திடீரென மரணமடைந்தது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க: இறந்து கிடந்த நாயின் சடலத்தை சாப்பிட்ட நபர்- தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த துயர சம்பவம்