வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பிரதமர் வீடு முற்றுகையிட்டு நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி, பணவீக்கம் உட்பட பல்வேறு பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து,ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மேலும் பிரதமர் வீடு முற்றுகை போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதேபோல ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்தவும், மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.