அரசின் எச்சரிக்கையை மீறி தன்னிச்சையாக விடுமுறை அளித்த 987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறி, பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பள்ளி பேருந்துகளை தீ வைத்து கொளுத்தியதுடன், பள்ளி கட்டிங்களையும், காவல்துறையின் வாகனங்களையும் சேதப்படுத்தினர். பின்னர் அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசி கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

இதனையடுத்து பள்ளி மீதான தாக்குதலை கண்டித்து நேற்று (18.07.2022) மாநிலம் முழுவதும் போராட்டத்திற்கு தனியார் பள்ளிகள் சங்கம், தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, தனியார் பள்ளி தாளாளர்கள் நலச் சங்கம் ஆகியன அழைப்பு விடுத்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளிக் கல்வி துறை, அரசின் உத்தரவு இல்லாமல் தனியார் பள்ளிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம். அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்பட வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாத வகையில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் எந்தெந்த பள்ளிகள் செயல் படவில்லை என்பதை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 11,335 தனியார் பள்ளிகளில் நேற்று 91 சதவீத தனியார் பள்ளிகள் செயல்பட்டன. ஆனால் பள்ளிக் கல்வி துறையின் எச்சரிக்கையை மீறி 987 தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அளித்து தன்னிச்சையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

இதனால் சம்மந்தப்பட்ட 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “அரசின் உத்தரவு, வழிகாட்டுதலை பின்பற்றி தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மாவட்ட கலெக்ட்ரோ அல்லது முதன்மை கல்வி அதிகாரியோ தான் விடுமுறை அளிக்க கூடியவர்கள்.

தாங்களாகவே எதன் அடிப்படையில் விடுமுறை விட்டீர்கள்? பள்ளிகளை மூடிய நிர்வாகிகள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முறையான விளக்கம் இல்லாதபட்சத்தில் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.