அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு, நிலம் வாங்குவதில் பெரிய மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ராம ஜென்மபூமி இருக்கும் இடம் அருகே நிலத்தை வாங்கி வருகிறது ஶ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா (Shri Ram Janmabhoomi Teerth Kshetra) அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மிகப் பெரும் மோசடி நடந்துள்ளது என்பது சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் பவன் பாண்டே இது தொடர்பாக அயோத்தியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பவன் பாண்டே, “ராம ஜென்மபூமி அருகே நிலம் ஒன்று மார்ச் மாதம் 18 ஆம் தேதி சுல்தான் அன்சாரி, ரவி மோகன் ஆகியோருக்கு ரூ.2 கோடிக்கு விலைக்கு விற்கப்பட்டது.

இந்த விற்பனை பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே அதே நிலத்தை ரூ.18.5 கோடிக்கு ஶ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வாங்கி இருக்கிறது. 5 நிமிடத்தில் ஒரு நிலத்தின் விலை எப்படி ரூ16.5 கோடி விலை உயரும்? இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என்று பவன் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் சிங் கூறும்போது, உலகில் எந்த ஒரு நிலமும் வினாடிக்கு ரூ5.5 லட்சம் விலை உயர்ந்தது கிடையாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டோரை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

[su_image_carousel source=”media: 24467,24468″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

மேலும் பவன் பாண்டே, சஞ்சய் சிங் இருவருமே இந்த நிலப் பதிவு தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதேபோல் ராமர் கோயிலுக்கு நிலம் வாங்குகிறோம் என்ற பெயரில் நடந்துள்ள இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி உள்ளது.

ஆனால் இந்த மோசடி புகார்களை ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அறக்கட்டளையின் சம்பத் ராய் வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் நிலத்தை வாங்கியுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் நிலத்தின் உரிமையாளர்கள் விற்ற நிலத்துக்கு பதிவு தான் அன்றைய தினம் செய்தனர். அதன் பிறகு அறக்கட்டளையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என விளக்கம் அளித்துள்ளனர். இந்த மோசடி புகார் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்